Tamil Font Messages Songs Today Message Radio Program

பொதுக்காலம் 16 வது - ஞாயிறு -

இரண்டாம் ஆண்டு 22-07-2012

 

``இயேசுவே எமக்கு அமைதி அருள்பவர்''

 

திருப்பலி முன்னுரை


கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே அனைவருக்கும் இறைவனின் நாளின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் உரித்தாக்கிகொள்கிறேன். கவலை இல்லாமல், கஷ்டமில்லாமல், நோயில்லாமல், நோக்காடில்லாமல் வாழவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். இந்த ஞாயிறு இதற்கு என்ன வழி என்று இயேசுவின் போதனையை கேட்டுச் செயல்பட அழைக்கின்றது.

பொதுக்காலத்தின் 16 வது ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

அன்புக்குரியவர்களே, சற்றே வந்து இளைப்பாறுங்கள். மனிதன் காலை முதல் இரவு வரை பல கணக்குகள் போட்டுத் தனது வாழ்வை நிர்ணயிக்கின்றான். உண்பதும் ஓய்வெடுப்பதும் கூட சம்பாதிக்கும் நேரமாகி விடுகின்றது. உண்பதும் ஓய்வெடுப்பதும் உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் சாந்தி தரும் செயல்பாடாகும். அதைத்தான் இயேசு தம்முடைய திருத்தூதர்களுக்குப் போதித்தார். சற்றே இளைப்பாறுங்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தின் கடைசி வாக்கியத்தை நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்: பெருந்திரளான மக்களைக் கண்ட இயேசு "அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்". சிறிது வியப்பைத் தரும் செய்தி இது. மக்கள்மீது இரக்கம் கொண்ட இயேசு அவர்களுக்கு உணவுகொடுக்கவில்லை, நோய்களைக் குணப்படுத்தவில்லை. எந்த அருங்குறியும் செய்யவில்லை. மாறாக, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இயேசுவின் இச்செயல் நம் கண்களைத் திறக்க வேண்டும். "பசியாயிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு" என்னும் சீனப் பழமொழியை நாம் அறிவோம். மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களின் பசியை, பிணியை நோக்காமல், அவர்களின் பசிக்கும், பிணிக்குமான காரணத்தைப் பற்றி எடுத்துரைத்தார், அவர்களது ஆன்மீக வெறுமையைப் பற்றிப் பேசினார்;. தந்தை இறைவனின் பேரன்பையும், அருள்காவலையும் பற்றிப் பேசினார். அவர்களின் அகக் கண்களைத் திறந்தார். எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களின் கண்களைத் திறந்ததுபோல, ஆயரில்லா ஆடுகள்போல் இருந்த அடித்தட்டு மக்களின் வாழ்வுச் சிக்கலையும், அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார். இதுதான் மிகச் சிறந்த அறப்பணி. இதுதான் சிறந்த அன்புப் பணி. எளியோர்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உதவி செய்தது நன்று. ஆனால், அதனினும் நன்று, அவர்களை விழிப்படையச் செய்வது. அவர்களுக்குக் கல்வி கற்பித்து, புதிய வாழ்வுக்கு வழிகாட்டுவது. அத்தகைய பரிவுச் செயல்களைச் செய்ய நாமும் முன்வர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்க வில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப் போகிறேன் என்கிறார் ஆண்டவர். என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள `தளிர்' தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். `யாவே சித்கேனூ' - ஆண்டவரே நமது நீதி - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

 

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி 

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 23: 1-3ய. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
 

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
 

பல்லவி

1 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்; 4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி 

இரண்டாம் வாசகம்திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 13-18

சகோதரர் சகோதரிகளே, ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

 

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


யோவா 10: 27 - அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்நற்செய்திக்கு முன் வசனம்

 

ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தனர்.


மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.


 

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ். 

இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

 

என்றும் வாழும் இறைவா,

உலகெங்கும் விரிந்து பரவி நிற்கும் உமது திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், இறைமக்களை இறையாட்சி நெறியில் உறுதிபடுத்தி வளரச்செய்ய தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே,

மனித வாழ்வுக்கு ஓய்வும் அவசியமானதே என்பதனை கண்டு கொள்ளும் ஞானத்தை இந்த அவசர உலகம் அறிந்து கொள்ள அருள்தர உம்மை மன்றாடுகின்றோம்.

 

மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குக் கற்பித்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியை நாங்கள் செய்ய உமது தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

போராட அழைப்பவராம் இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

ஆறுதல் அளிப்பவராம் இறைவா,

பல்வேறு நோய்களாலும், துன்பங்களாலும் வேதனை அடைந்து வருந்தும் மக்கள் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உமது இரக்கத்தால் தங்கள் வாழ்வில் ஆறுதலை சுவைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

உற்ற துணைவராம் இறைவா,

தொடங்கப்படவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நாடுகளிடையே சமாதானத்தையும், ஒற்றுமையையும் மகிழ்வையும் உருவாக்கிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிக்கி இறையன்பையும் பிறரன்பையும் புறக்கணித்து வாழும் மனிதர்கள், சமூக அநீதிகளுக்கு எதிரானவர்களாகவும் அமைதி ஏற்படுத்துபவர்களாகவும் மாற அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

 

அன்பு தந்தையே இறைவா,

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 

 

 

God Bless You

 
Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.