Tamil Font Messages Songs Today Message Radio Program

பொதுக்காலம் 18 வது - ஞாயிறு

இரண்டாம் ஆண்டு 05-08-2012

''அழிந்து போகும் உணவும், அழியா வாழ்வு தரும் உணவும்!''

 

திருப்பலி முன்னுரை


அழைக்கப்பெற்றவர்களே, இன்று பொதுக் காலம் பதினெட்டாம் ஞாயிறு. இரக்கமும் கனிவும் உடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் நாம் ஒன்று கூடியுள்ளோம்.

இன்றைய நற்செய்தியில், யேசு "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" என்று கூறுகிறார். நற்செய்தி வாசகத்தில் மீண்டும் இரு விதமான உணவுகளைக் காண்கிறோம். வாசிக்கிறோம்.

அழிந்து போகும் உணவு. இந்த உணவுக்காகத்தான் மனிதர் அனைவரும் ஆலாய்ப் பறக்கின்றனர். ஆர்வத்துடன் உழைக்கின்றனர். இடையூறுகளைச் சகித்துக்கொள்கின்றனர். அழியாத வாழ்வு தரும் உணவாக இறைமகன் இயேசு இருக்கிறார். அவரது மொழியும், உடலும் நிலைவாழ்வைத் தருகின்றன. ஆனால், இவற்றின்மீது ஆர்வமற்றவர்களாக, அல்லது ஆர்வம் குறைந்தவர்களாக நம்மில் பலரும் வாழ்கிறோம். மெல்ல, மெல்ல உலக மக்கள் இறைப் பற்றை, ஆன்மீகத்தின் அடிநாதத்தை இழந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இறைவன் தரும் அமைதி, ஆற்றல், மகிழ்ச்சியைவிட உலக இன்பங்கள், உணவு, உல்லாசங்கள் பெரிய மதிப்பீடுகளாக மாறி வருகின்றன. எனவே, இன்று இயேசு நமக்கு ஓர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கின்றார்; அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். எனவே, நம் அன்றாட வாழ்வில் இறைவார்த்தைக்கும், நற்கருணைக்கும், இறைத் திருவுளத்துக்கும் நேரமும், ஆற்றலும் செலவழிக்க முன்வருவோம். அப்போது மற்ற அனைத்தையும் இறைவன் நமக்கு நிறைவாகத் தருவார். இறையருள்கேட்டுத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

 

முதல் வாசகம்


முதலாம் வாசகம் விடுதலைப் பயணம் 16:2-4,12-15

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். "இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்." "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், "மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்" என்று சொல" என்றார்."மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையானلل தட்டையானلل மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது."இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி "மன்னா " என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:"

 

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி 

பதிலுரைப் பாடல்


திருப்பாடல்: 78: 3-4. 23-25. 54
 

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.
 

பல்லவி

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை-இவற்றை உரைப்போம். 4 அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்; வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். பல்லவி

23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். 24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். 25 வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். பல்லவி

54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். பல்லவி


 

இரண்டாம் வாசகம்திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:17,20-24

ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தாவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

 

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்! அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்நற்செய்திக்கு முன் வசனம்

 

''இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)


யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:24-35

இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏற இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்? " என்ற கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் " என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள். "இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார். அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் " என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! " என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல: வானிலிருந்து உங்களுக்கு உண்மையான அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது " என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்" என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.


 

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ். 

இறைமக்களின் வேண்டல்கள்:


நம் வானகத் தந்தை அன்பில் நிறைந்தவர், அருளில் சிறந்தவர். நாமும் நம் வாழ்வின் குறைகள் நீங்கி நிறை வாழ்வைப் பெற, நமக்குத் தேவையான அருள் வரங்களை இறைவனிடம் மன்றாடிக்கேட்போம்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

 

“என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன்” என்று கூறிய நற்கருணை நாதரே.

புரட்சிகர புதிய கண்டு பிடிப்புக்கள், கவர்ச்சியை காசாக்கும் காரியங்கள், மானிடத்தை மாயைக்குள் அழைத்து செல்ல, மனித மாண்பற்ற தன்மைகளால், பண்பற்ற கலாசார நிலைகளால் ஆன்மீகத்தை அழிவு நிலைக்குள்ளாக்கும் எமக்கு அருள் வழிகாட்டி நிறைவாழ்வை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் பாப்பானவர் ஆயார்கள் அருள்பணியாளர்கள் மற்றும் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்கள் நாளும் பயனிக்கும் சறுக்கான பாதைவழியே வழுக்காமல் உம்மை நோக்கி சென்று என்றும் உம் திருவுளத்தை நிறைவேற்ற நீரே அவர்களுக்கு துணையாக இருந்தருள வேண்டு என்று உம்மை மன்றாடுகிறோம்.

 

“அழியா வாழ்வின் உணவான இயேசுவே,

நீர் வழங்கும் வார்த்தை மற்றும் நற்கருணை என்னும் உணவுகளுக்காக நன்றி செலுத்துகிறோம். அழிந்து போகும் உணவுக்காக நாங்கள் அதிகம் கவலைப்பட்டு, உம்மை மறந்துவிடாதிருக்க எங்களுக்கு அருள்தாரும். நீரே வானிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு என்று ஏற்று அறிக்கையிடுகிறோம். ஆண்டவரே, இவ்வுணவை எப்போதும் எங்களுக்குத் தாரும் என்று மன்றாடுகிறோம்.

 

“அன்பின் இறைவா,

உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

“என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை மகிழ்வாக்கியருளும் எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 

”சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன்;” என்று கூறிய இயேசுவே.

மரத்துப்போன மனதுடனே, மனிதங்கள் மட்டும் வாழ அதிகார வெறியில் ஆணவம் பாடுகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். இதனால் இனியும் இழக்க ஏதுமின்றி விழியோரத்தில் முடிவில்லா சுமைகளை சுமந்தபடி வழியோரம் வருகின்றன எம் வாழ்க்கை. வேறேங்கும் கிட்டாத மன ஆறுதல் உமது இல்லத்தில் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் உம் அண்டை ஓடோடி வருகின்றோம் நாம். எம் மனவேதனைகள் மகிழ்சியாகமாற்றும், இழப்பால் இடிந்து போன எம் இதயங்களுக்கு இன்றைய உம் இனிமைகள் எல்லாம் நிரந்தரமாக கிடைக்க துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.

உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம் எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

 

 

 

 

 

God Bless You

 
Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.